‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் விமல், எழில் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான ‘தேசிங்குராஜா’ படத்தில் நடித்திருந்தார். நல்ல வரவேற்பைப் பெற்ற அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. ‘தேசிங்கு ராஜா 2’ என்ற இந்த திரைப்படம், முதல் பாகத்திலிருந்து வித்தியாசமான கதைக்களத்தில், ஆனால் அதேபோன்ற நகைச்சுவையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ரவி, மரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளுசபா சுவாமிநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்பினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைந்துள்ள இப்படம் வரும் வருகிற ஜூலை 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, பல்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் பயிலும் நான்கு நண்பர்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா மற்றும் ஹர்ஷிதா இந்தப் படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்நிலையில், ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.