பிவி பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமையான கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ஒரு எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது. முன்னணி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். படத்தின் துவக்க விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டை அடித்து, இயக்குநர் சசி கேமராவை ஆன் செய்து, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சர்கார் மற்றும் தர்பார் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிக முக்கியமான ஒரு சமூக பிரச்சனையை காதலும் திரில்லரும் கலந்த கமர்ஷியல் அம்சங்களுடன் வழங்கும் முயற்சியாக இத்திரைப்படம் உருவாகிறது.பிரபஞ்சம் ஒளித்துவைத்திருக்கும் பல ஆச்சரியங்களும், மனித வாழ்வில் ஏற்படும் சீரிய மாற்றங்களும், அதிர்வுகளும் தான் கதையின் மையம். நம் நாட்டில் நிகழும் மற்றும் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய பெரிய ஆபத்து குறித்து இப்படம் பேசுகிறது. காதலும் களவும் என்ற ஐந்திணைக் உரைமொழியால் அழகான வாழ்வியல் தளத்தில் இக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஜெய் நாயகனாக நடிக்க, மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கின்றார். அவர்களுடன் யோகி பாபு, கேஜிஎப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் பாபு விஜய் இப்படத்தை தயாரித்து இயக்கியிருப்பதுடன், இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். சென்னை, கொடைக்கானல், நெல்லூர் போன்ற இடங்களில் இப்படம் படமாக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ஜெய் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.