விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படத்தின் பர்ஸ்ட் ரோர் (கிளிம்ஸ் வீடியோ) வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வெளியீட்டை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், குறித்த கிளிம்ஸ் வீடியோ 24 மணி நேரத்திலேயே 32.4 மில்லியன் ரியல் டைம் பார்வைகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 மணி நேரத்தில் இவ்வளவு அதிக பார்வைகளை பெற்றது என்பது, “ஜனநாயகன்” திரைப்படத்தை தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான கிளிம்ஸ் வீடியோக்களில் முதல் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த சாதனைக்கான தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குநர் எச்.வினோத்தின் இயக்கத்தில் “ஜனநாயகன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாவது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு, விஜய் முழுமையாக அரசியல் பக்கம் சென்றுவிடுவார் என்பதும் தற்போது பரவலாக பேசப்படும் தகவல்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுவதால், இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிக அதிகமாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் பாபி தியேோல் நடித்துள்ளார். இவர்களுடன் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.