இந்தி திரைப்பட இயக்குநராக உள்ள விவேக் அக்னிஹோத்ரி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தை மையமாகக் கொண்டு ‘தி தாஷ்கண்ட் பைல்ஸ்’ என்ற திரைப்படத்தை 2019-ம் ஆண்டு இயக்கினார்.
இதையடுத்து 2022-ம் ஆண்டு வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு அவர் இயக்கிய ‘த வேக்ஸின் வார்’ படத்துக்குப் பிறகு, தற்போது ‘தி டெல்லி பைல்ஸ்: த பெங்கால் சாப்டர்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.இந்தப் படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையிடப்படுகிறது. சமீபத்தில், இப்படத்தின் தலைப்பு ‘தி பெங்கால் பைல்ஸ்: ரைட் டூ லைஃப்’ என மாற்றப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனங்கள் இந்தப் படத்தின் புதிய டீசரை தங்களது யூடியூப் பக்கங்களில் வெளியிட்டுள்ளன. இதில், “உங்களை காஷ்மீர் காயப்படுத்தியிருந்தால், பெங்கால் பயமுறுத்தும்” என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் மிதுன் சக்கரவத்தி, தர்ஷன் குமார், அனுபம் கெர் மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.1946-ம் ஆண்டு வங்காளப் பகுதிகளில் நடந்த வன்முறைகளையே மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.