தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் விஜய். இவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் அட்லீ இயக்கினார். அட்லீயின் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்களில் இதுவும் முக்கியமானதாகும். விஜயுடன் இணைந்து சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும், இது பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் இப்படத்தில் வெற்றிமாறன், வெற்றி, மாறன் என மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்து, வெளியான அந்த ஆண்டில் அதிகமாக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக இருந்தது.
இந்த நிலையில், தற்போது ‘மெர்சல்’ படத்தின் மீண்டும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜூன் 20-ம் தேதி ‘மெர்சல்’ படத்தை மீண்டும் திரையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.