லெவன் — சென்னையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையும் போதை மாத்திரைகளின் விநியோகத்தையும் வெற்றிகரமாக தடுத்து, அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் போலீஸ் உதவி கமிஷனராக இருக்கும் நவீன் சந்திரா ஈடுபடுகிறார். இதே சமயத்தில் நகரத்தில் தொடர்ச்சியாக கொலைகள் நடைபெறுகின்றன. ஒரே மாதிரி நடைபெறும் இந்த கொலைகளுக்கு பின்னால் என்ன காரணம் என்பதை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். இதனை கவனித்த போலீஸ் கமிஷனராக இருக்கும் ஆடுகளம் நரேன், இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கிறார். நவீன் சந்திரா இந்த வழக்கில் விசாரணையை தொடங்கியதும் மேலும் பல கொலைகள் நடைபெற ஆரம்பிக்கின்றன.
இந்த வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத சூழ்நிலையில், முக்கியமான ஒரு தடயம் போலீசாரிடம் சிக்குகிறது. அந்த தடயத்தின் அடிப்படையில், நவீன் சந்திரா புலனாய்வை ஒரு புதிய கோணத்தில் தொடர்கிறார். இறுதியில், இந்த வழக்கை அவர் எப்படி முடிக்கிறார்? இந்த கொலைகளை யார் செய்தார்? ஏன் செய்தார்? இந்த விசாரணையின் போக்கில் என்னென்ன நடந்தது? என்பதே படத்தின் மையக் கதையாகிறது.
ஒரு தரமான திரில்லர் படமாக லெவன் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் சிறப்பாக உருவாக்கியுள்ளார். படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து இறுதி வரை சஸ்பென்ஸுடன் கூடிய திருப்பங்களை தொடர்ந்து கொடுத்து, ரசிகர்களை இருக்கையில் எழ முடியாதவாறு ஈர்த்துள்ளார். ஒரு புலனாய்வு கதைக்கு தேவையான திரைக்கதை, காட்சிகள், மற்றும் கதாபாத்திரங்களை மிகவும் கவனமாகவும் நேர்த்தியாகவும் தேர்ந்தெடுத்துள்ளார். இதுவரை யாரும் புலனாய்வு திரில்லரில் எடுத்துக்கொள்ளாத ஒரு முக்கியமான அம்சத்தை கருவாகக் கொண்டு, சிக்கலான மற்றும் திருப்பங்கள் நிறைந்த கதையை ரசிகர்களுக்கு பரிமாறியுள்ளார். இவர் இயக்குநர் சுந்தர் சி-யிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவமுள்ளவர். தற்போது இந்த விறுவிறுப்பான திரில்லர் கதையுடன் வெற்றியைத் தன் பக்கம் இழுத்துள்ளார்.
படத்தின் நாயகனாக நடித்துள்ள நவீன் சந்திரா, தன் சிறப்பான நடிப்பின் மூலம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அந்தக் காட்சியை உயர்த்தியுள்ளார். ஆறு அடி உயரம், கடுமையான முகபாவனை, துள்ளியமான உடல் மொழி, அளவான உரையாடல் என ஒரு உண்மையான காவலர் போலவே நடித்துள்ளார். அவருக்கு துணையாக உதவி ஆய்வாளராக திலீபன் மிகவும் நன்றாக நடித்துள்ளார்.
அபிராமியின் கதாபாத்திரம் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. அவருடன் நடித்துள்ள ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாமராஜு, ஆடுகளம் நரேன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் பங்களிப்பை மிகச்சிறப்பாக அளித்துள்ளனர்.