தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. அனிருத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க பல வருடங்களாக எதிர்பார்த்து வந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது, தனது 12-வது திரைப்படமான ‘கிங்டம்’ திரைப்படத்தில் நடித்துவிட்டு முடித்துள்ளார். இப்படத்தை கவுதம் தின்னனுரி இயக்கியுள்ளார், மேலும் சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கிங்டம்’ திரைப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையிடப்படுகிறது.
சமீபத்திய பேட்டியில் விஜய் தேவரகொண்டா,“நான் ‘விஐபி’ மற்றும் ‘3’ திரைப்படங்களைப் பார்த்தபோது, அனிருத்தின் இசையால் கவரப்பட்டேன். அவரை பற்றி யார் இந்த மேதை எனும் எண்ணம் தோன்றியது. அவர் ஒரு சாதாரண இசையமைப்பாளர் அல்ல என்பதுபோல் எனக்குப் பட்டது. அப்போது நான் நடிகராக இல்லை. ஆனால், ஒருநாள் நடிகராக மாறினால், என் படங்களுக்கு இசையமைக்கவேண்டியவர் இவர்தான் என்று எனக்குள் தீர்மானித்து விட்டேன்.நான் ஒரு ராஜாவாக இருந்திருந்தால், அனிருத்தை கடத்தி வந்து என் அரண்மனையில் வைத்திருப்பேன். அவர் என் படங்களுக்கு மட்டும் இசையமைக்க வேண்டும் என்பதற்காக….அவருடன் பணியாற்ற பல ஆண்டுகள் காத்திருந்தேன் என மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.