தமிழில் அயோத்தி, கருடன், நந்தன் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படத்தில் நடிகை சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இலங்கை தமிழர்களாக உள்ள சசிகுமாரின் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழ்நிலையால் தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன் பின் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், உணர்ச்சி கலந்த தருணங்கள் மற்றும் நகைச்சுவையுடன் கலந்து இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது. இப்படம் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் ரூ.20 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சசிகுமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்தப் படம் பலரின் கனவுகளை நனவாக்கியுள்ளது. நல்ல கதைகளை கொண்டிருப்பவர்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது. ஒரே மாதிரியான படங்களை மீண்டும் மீண்டும் செய்வதற்குப் பதிலாக வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதற்கான நம்பிக்கையை இந்தப் படம் அளித்திருக்கிறது. குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து எனக்கு இது பெரிய வெற்றியைத் தந்துள்ளது. ஆனால் இதை என் தனிப்பட்ட வெற்றியாக நான் பார்ப்பதில்லை. இது புதிய தலைமுறையின் வெற்றி என்கிற உணர்வை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.