பிரபல ஊடகம் நடத்திய ‘ஹடில்’ நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் பல முக்கியமான அம்சங்களைப் பகிர்ந்துள்ளார். ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலிருந்தும் தான் கற்றுக்கொண்ட அனுபவங்களை அவர் நிகழ்வில் கூறியுள்ளார். அவர் கூறும்போது, “இந்தப் படம் எனக்குக் கற்றுத்தந்த மிக முக்கியமான பாடம் என்னவெனில், ஒரு இயக்குநராக உங்கள் படத்தை உருவாக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை யாரும் தீர்மானிக்கக் கூடாது என்பதுதான். நான் என்னுடைய நேரத்தை எடுத்திருக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்தில் இன்னும் 3 முதல் 4 மாதங்கள் பணியாற்ற விரும்பினேன்” எனத் தெரிவித்தார்.

பின்னர் ‘வாடிவாசல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறித்து அவர் கூறும்போது, “நான் அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ப பதிலளிக்க விரும்பவில்லை. என் நூறு சதவீத உழைப்பையும் என்னுடைய வேலைக்கே செலுத்த விரும்புகிறேன். என் படங்கள் மூலம் உருவான எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல” என்று கூறினார்.
திரைத்துறையில் பெண்கள் தொழில்நுட்பத் துறைகளில் வருகிற வாய்ப்புகளைப் பற்றியும் வெற்றிமாறன் தனது கருத்தை தெரிவித்தார். “சமீபத்தில் ஒரு இளம்பெண் என் அலுவலகம் வந்தார். அவர் உதவி இயக்குநராக சேர விரும்பினார். கோயம்புத்தூரைச் சேர்ந்தவர், ஆனால் சென்னையில் தன் நண்பர்களுடன் வசிப்பதாகச் சொன்னார். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நானும் அதே நிலைமையில் இருந்தேன். இப்போது பல இளம்பெண்கள் தனித்துவமான யோசனைகளுடன் வெளிவருவதைப் பார்த்து மகிழ்கிறேன்” என்றார்.
மேலும், “நான் காதல் கதைகள் எடுப்பதைக் கூட யோசிக்கிறேன், ஆனால் நீங்கள் என்னிடமிருந்து வேறு வகையான கதைகளை எதிர்பார்க்கிறீர்கள்” என்ற அவர், சமீபத்தில் தனது விருப்பமான இளம் இயக்குநர்கள் குறித்து கூறினார். “பலரும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மிகச் சிறந்த படங்களை உருவாக்குவார்கள் என்று நம்புகிறேன். அந்த பட்டியலில் வினோத்ராஜ் மற்றும் ‘பெட் கேர்ள்’ இயக்கிய வர்ஷா ஆகியோரும் உள்ளார்கள்” என்று கூறினார்.