தமிழ் மட்டும் அல்லாமல், பல்வேறு மொழிகளிலும் தனக்கென ஒரு பெரும் இசை ரசிகர்களை கொண்டவர் இளையராஜா. தற்போது, தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள ‘சஷ்டிபூர்த்தி’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை பவன் பிரபா இயக்கியுள்ளார். ரூபேஷ், ஆகான்ஷா, ராஜேந்திர பிரசாத், அர்ச்சனா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் மே 30ஆம் தேதி தியேட்டர்களில் வெளிவர உள்ளது.

இத்திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ராத்ரன்த ரச்சே’ என்ற பாடல் நேற்று யூடூப் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நித்யஸ்ரீ வெங்கட்ரமணன் பாடியுள்ளனர்.
முன்னதாக யுவன் ஷங்கர் ராஜா தெலுங்கில் பாடியிருந்தாலும், அவரது தந்தை இளையராஜா இசையமைத்த படத்தில் தெலுங்கில் அவர் பாடியது இதுவே முதல் முறை. தந்தை மற்றும் மகனை ஒரே படத்தில் இசை மூலம் இணைத்ததற்காக படக்குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், இப்படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி ஒரு பாடலுக்காக வரிகளை எழுதியுள்ளார்.