ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய ராணுவம் கடந்த 7ம் தேதி அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை முற்றிலுமாக அழித்தது. இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம், அதே நாளின் இரவு ஜம்மு-காஷ்மீர் எல்லை அருகே உள்ள கிராமங்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்த எல்லைத் தாக்குதல்களையும் நமது பாதுகாப்பு வீரர்கள் திறமையாக முறியடித்தனர்.

இந்த சூழ்நிலையில், தேசத்தின் பாதுகாப்புக்காக உயிரை பணயம் வைத்து செயல்படும் ராணுவ வீரர்களின் தியாகத்தை வியப்புடன் பாராட்டிய நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உணர்வுப்பூர்வமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், “வீட்டையும், குடும்பத்தையும் விட்டு வெகு தொலைவில், நாம் சந்திக்காத மக்கள் மற்றும் அவர்களின் நாட்டின் நலனுக்காக எல்லையில் வீரர்கள் காத்து நிற்கிறார்கள். அவர்களால் தான் நம்மைச் சுற்றி அமைதி நிலவுகிறது, நம் குழந்தைகள் அமைதியாக உறங்குகிறார்கள், நமது தேசியக்கொடி சுதந்திரமாக பறக்கிறது.
வீரர்களின் தியாகம் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒலிக்கிறது. நாங்கள் இன்று வாழும் வாழ்க்கையை நீங்கள் உங்கள் உயிரை பனயம் வைத்து பாதுகாக்கிறீர்கள். நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்போம், நன்றியுடன் இருப்போம். எப்போதும்… இது தான் எங்கள் வாக்குறுதி. எங்கள் தாய்நாடு பாதுகாப்பாக இருக்கட்டும். நம்மை பாதுகாக்கும் வீரர்களும், அவர்களது குடும்பத்தினரையும் என்றும் பெருமையுடன் வாழ வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.