குவாண்டம் பிலிம் பேக்டரி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஆர். கே. வித்யாதரன் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ஸ்கூல்’. இதில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே. எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை ஆதித்யா கோவிந்தராஜ் செய்துள்ளார். இப்படம் வரும் மே 23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் வித்யாதரன் கூறியதாவது, இது ஒரு உளவியல் திரில்லர் திரைப்படம். இன்றைய பள்ளி மாணவர்களின் பார்வையில், சமூகவியலில் நடைபெறும் கொலை, தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற முக்கியமான குற்றச்செயல்களைப் பற்றிய ஆய்வாகவும், அதை சுவாரஸ்யமாக விவரிக்கும் கதையாகவும் அமைந்துள்ளது.
அதேவேளை, மனித உயிரின் பயணம் மற்றும் ஆவிகள், பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து தீவிரமாக சித்தரிக்கப்படுகிறது. மாணவர்களுடன் எளிதில் பழகி அவர்களை நல்ல பாதையில் வழிநடத்தும் ஆசிரியராக யோகிபாபு நடிக்கிறார். மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆய்வு செய்யும் ஆசிரியராக பூமிகா நடித்துள்ளார். ஸ்கூலில் நடைபெறும் குற்றச்செயல்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக கே. எஸ். ரவிக்குமாரும், பள்ளி முதல்வராக பக்ஸும் நடித்துள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இப்படம் இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு பாடமாகவும், வழிகாட்டியாகவும் அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.