‘ஆண்மை தவறேல்’, ‘யாக்கை’ போன்ற படங்களை இயக்கிய குழந்தை வேலப்பன், தற்போது ‘யுகம்’ எனும் ஒரு புதிய வெப் சீரியசை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாகவே அவர் நடித்துள்ளார். அவருடைய மனைவியாக நடித்துள்ளவர் நர்மதா. நிஜ வாழ்க்கையிலும் குழந்தை வேலப்பனின் காதல் மனைவியாக இருப்பவர் நர்மதாவே. இந்தக் கதையும் புதிய முயற்சியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கதைப்படி, காலை 9.30 மணிக்கு டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் மனைவி, அந்த நிலைமையிலிருந்து எப்படி மீள்கிறாள் என்பதே மையமாகிறது. இந்த படத்தின் மிகப்பெரிய தனிச்சிறப்பு, இது செங்குத்தான (vertical) கேமரா கோணத்தில் எடுக்கப்பட்டிருப்பதுதான். இதனால், இது செல்போனில் ரீல்ஸ் பார்ப்பது போலவே தோன்றுகிறது. இந்த வகையில் இந்தியாவில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும்.
உலகளாவிய அளவில் இத்தகைய வெர்டிகல் கோண படங்கள் உருவாகி வருகின்றன. இவற்றுக்கான திரைப்பட விழாக்கள், கருத்தரங்குகள் நடந்துவருகின்றன. இந்தியாவில் இல்லாவிட்டாலும், ஐரோப்பாவில் செல்போன் மாதிரியாக வெர்டிகல் வடிவத்தில் படம் பார்க்கக்கூடிய டிவிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் வெர்டிகல் பார்வை படங்கள் அதிகரிக்கப்போகின்றன; அதற்கான ரசிகர்களும் உருவாகப்போகின்றனர். இது ஒரு புதிய முயற்சியின் தொடக்கம் என கூறுகிறார் இயக்குநர் குழந்தை வேலப்பன்.