சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிம்பு பேசுகையில், “தில்லுக்கு துட்டு, டிடி முந்தைய பாகங்களை நான் ரசித்து பார்த்தேன். சந்தானம் என் நண்பராக இருந்தாலும், ரசிகனாகவே அவருடைய படங்களை பார்த்தேன். இந்தப் படத்திலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய உடல் மொழி மிக நன்றாக இருக்கிறது. இந்த படத்தை தயாரித்த ஆர்யாவுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

மன்மதன் காலத்திலிருந்தே சந்தானம் ஒரு மூன்று பேர் கொண்ட குழுவுடன் பணியாற்றி வந்துள்ளார். அந்தக் குழுவின் உழைப்பு இன்றும் தொடர்கிறது.ரெடின் கிங்ஸ்லி ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நன்கு அறிமுகமானவர். ஆனால், எனக்கு அவர் ‘வேட்டை மன்னன்’ பட காலத்திலிருந்தே தெரியும். அவர் ஒரு நாளில் பெரியவராக மாறுவார் என்று அப்போதே கூறினேன். அந்த படத்தினை இயக்கிய நெல்சனும் அதை உணர்ந்தவர். இப்போது கிங்ஸ்லி இல்லாமல் நெல்சன் படமே இருக்காது.இந்தப் படத்தில் கவுதம் மேனன் ஒரு புதிய கோணத்தில் உள்ளார். ட்ரைலரில் அவர் நடித்திருக்கும் பாட்டும் இடம் பெற்றுள்ளது. அவர் எந்த வேலையையும் சாதாரணமாக விடுவார் என நினைக்க வேண்டாம்.
மற்றவர்கள் கேரக்டர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். பல பேட்டிகளில் அவர் என்னைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார். அதைப் பற்றி என்னிடம் பலரும் கேட்கிறார்கள். அதற்கு நான் ‘அது தான் சந்தானம்’ என்பேன்.எஸ்.டி.ஆர் 49 படத்தில் சந்தானம் ஏன் இருக்கிறார் என சிலர் கேட்கிறார்கள்.
இப்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை குறைந்து, ஆக்ஷன் படங்களே அதிகமாக உருவாகின்றன. ஆனால் மகிழ்ச்சியான, ‘பீல் குட்’ படங்களும் வரவேண்டும். அந்த படம் நடக்கும்போது சந்தானம் நடிப்பாரா என்று பலர் கேட்டனர். நான் ‘ஒரு போன் பண்ணினால் போதும்’ என்றேன். அது நடந்துவிட்டது. அதேபோல அவர் என்னை அழைத்ததால் இந்த விழாவிற்கு வந்தேன். இனிமேலும் சந்தானம் தொடர்ந்து நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும். அவர் இன்னும் அதிக படங்களில் நடிப்பார்” என்று சிம்பு தெரிவித்தார்.