மதுரையை வந்தடைந்த நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு, அவரை வரவேற்க ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக விஜய், “மதுரையில் நான் பயணம் செய்யும் போது யாரும் எனது வாகனங்களை பின்தொடரவேண்டாம்” என வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால் ரசிகர்கள் அதை பின்பற்றாமல், உற்சாகத்துடன் அவரைப் பின்தொடர்ந்தனர்.
விஜய் தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறுகிறது. அதற்காக விஜய் விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின்னர் காரில் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டார். விஜய் மதுரை வருவதைத் தெரிந்துகொண்ட ரசிகர்கள், அதிகாலையிலிருந்தே மதுரை விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
முன்னதாக, விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இது, அவர் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு, முதன்முறையாக செய்தியாளர்களுடன் நேரில் பேசிய தருணமாகும். அப்போது விஜய் கூறியதாவது: “மதுரை மக்களுக்கு எனது அன்பான வணக்கங்கள். நான் இப்போது எனது வேலைக்காக, ‘ஜனநாயகன்’ திரைப்படப் பணிக்காக செல்கிறேன். விரைவில் கட்சி சார்பாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மதுரை மண்ணில் உங்களை சந்திக்க வருகிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் எனது வேலைக்கு செல்கிறேன். நீங்களும் பாதுகாப்பாக உங்கள் இல்லங்களை நோக்கி செல்லுங்கள்” என்றார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: “மதுரையில் நான் பயணம் செய்யும் வேளை, என் வேன் மற்றும் காரை யாரும் பின்தொடர வேண்டாம். பைக்கில் வேகமாக ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, டூவீலரில் நிற்கும் வகையில் பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இப்படிப்பட்ட காட்சிகளை பார்ப்பது எனக்கு மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இதுபோன்ற விஷயங்களை மதுரை விமான நிலையத்தில் சொல்ல இயலவில்லை. சூழ்நிலைகள் எப்படியிருக்கும் என்பதை யாருக்கும் நிர்வகிக்க முடியாது” என விஜய் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.