ராஜீவ் மேனன் இயக்கத்தில், மம்முட்டி, அஜித், அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு, ஷாமிலி மற்றும் பலர் நடித்துக்கொண்ட 2000ஆம் ஆண்டு வெளியான படம் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’. அப்போது மல்டி ஸ்டார் காம்பினேஷனுடன் வெளிவந்த ஒரு கிளாசிக் காதல் திரைப்படம் இது. வசூல் ரீதியாக பெரிய அளவில் வருவாயைப் பெற்றிருக்கவில்லை என்றாலும், பல பிரபல நட்சத்திரங்களை ஒரே படத்தில் காணும் அனுபவம் அந்த காலக்கட்டத்தில் மிகவும் தனித்துவமாக இருந்தது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும் மிக சிறப்பாக அமைந்திருந்தது. இப்போது அந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முன்னெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று நடைபெற்ற ‘சச்சின்’ ரீரிலீஸ் வெற்றி விழாவில் இதுகுறித்து அவர் அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்குப் பிறகு, கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையுடன், சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த 2003ஆம் ஆண்டு வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தையும் விரைவில் திரையரங்குகளில் மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். இதைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டில், பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து 2016ஆம் ஆண்டு வெளியான ‘கபாலி’ படத்தையும் ரீரிலீஸ் செய்யும் திட்டம் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை அனைத்தும் தற்போது திட்டமிடப்பட்டுள்ள ரீரிலீஸ் பட்டியலில் உள்ளன. மேலும், தனது புதிய தயாரிப்பாக மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’ படத்தின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.