தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 திரைப்படம் மே மாதம் 1ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நானி உற்சாகமாக பங்கேற்று வருகிறார். சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, “மேற்கத்திய திரைப்படங்களில் இருந்து இன்ஸ்பிரேஷன் பெற்ற சினிமா யூனிவர்ஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக வளர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக தென்னிந்தியத் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரசாந்த் வர்மா போன்ற இயக்குநர்கள் இந்த சினிமாடிக் யூனிவர்ஸில் முன்னணியில் உள்ளார்கள்.

ஒரு படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுத்துவது, அல்லது திரையரங்குகளுக்கே அவர்களை ஈர்ப்பது என எந்த விதமான முயற்சியும் சினிமாவுக்கே நல்லதுதான் என நம்புகிறேன். ஏற்கனவே நான் HIT போன்ற ஒரு சினிமா யூனிவர்ஸில் இணைந்துவிட்டேன்.
அதேபோன்று லோகேஷ் கனகராஜ் இயக்கும் படைப்புகளும் மிக சிறப்பாக இருக்கின்றன. அவருடைய படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்தவை. எதிர்காலத்தில் ஏதேனும் வாய்ப்பு அமையும்போது, அவருடைய சினிமா யூனிவர்ஸில் நானும் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்” என்றார்.