மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், 2018-ம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் தடாக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், ரூஹி, குட் லக் ஜெர்ரி, மிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.

இதனையடுத்து, கடந்த ஆண்டு வெளியான தேவரா திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், ராம் சரண் நடித்து வரும் திரைப்படமான பெத்தியில், ஏ.ஆர். ரகுமானின் இசையில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள ஒரு வெப் தொடரில், ஜான்வி கபூர் தமிழ் மொழியில் அறிமுகமாகவிருக்கிறார். களவாணி திரைப்படத்தை இயக்கிய சற்குணம் இந்த வெப் தொடரை இயக்கவுள்ளார். பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த வெப் தொடர் தற்போது முழுவீச்சில் தயாரிப்பு முன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.