தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிம்பு. தற்போது இவர், பிரபல இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள “தக் லைப்” எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதற்குப் பிறகு, சிம்பு மேலும் மூன்று புதிய திரைப்படங்களில் நடித்திட ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது சிம்பு ‘தக் லைப்’ திரைப்படத்திற்கான விளம்பரப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ‘தக் லைப்’ திரைப்படம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தனது எண்ணங்களை திறம்பட பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, “திருமணமே ஒரு பிரச்சினை என நான் நினைக்கவில்லை, பிரச்சினை மக்கள் தான். இன்றைய கால கட்டத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கக் கூடிய மனப்பான்மை மிகவும் குறைந்துவிட்டது. ‘நீ இல்லையென்றால் வேறொருவர்’ என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது. அப்படி இருக்கக் கூடாது. சரியான நேரத்தில், உங்களுக்கேற்ற சரியான நபரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.