பவன் பிரபா இயக்கத்தில், இசை அமைப்பாளராக இளையராஜா பணியாற்றியுள்ள ‘சஷ்டிபூர்த்தி’ என்ற தெலுங்கு திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ரூபேஷ், அகன்க்ஷா சிங், ராஜேந்திர பிரசாத், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதேபோல், இந்தப் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள இசையமைப்பாளர் கீரவாணியும் நிகழ்வில் பங்கேற்றார்.

விழாவில் கீரவாணியும், ராஜேந்திர பிரசாதும், இளையராஜாவை பற்றிய தங்கள் அபிமானத்தையும், மரியாதையையும் மிகவும் உணர்வுபூர்வமாக பேசினர். நிகழ்ச்சியின் போது இளையராஜா பேசும்போது, “எனக்கு இசை தெரிகிறது என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் மக்கள் அப்படி நினைக்கிறார்கள். உண்மையில் ஒரு பாட்டு எனக்கு எப்படி வருகிறது என்று எனக்கே தெரியாது. அது எனக்குத் தெரிந்திருந்தால், அந்த நிமிஷத்திலேயே நான் இசையை நிறுத்தி இருப்பேன்.
இந்தப் படத்தில் நான் செய்த வேலை இருக்கிறது. சில பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன, மற்ற பாடல்கள் வெளியாவும். அந்தப் பாடல்களை மக்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள் என்று நம்புகிறேன். கீரவாணி இந்தப் படத்திற்கு எனக்காக ஒரு பாடலை எழுதியிருந்தார். அவர் அந்த பாடலை வாசிக்கும்போது, அது அவருடைய உள்ளத்திலிருந்து எழுந்த உணர்வாக இருந்தது போல இருந்தது. அதில் அவர் என் மீதான தனது தூய்மையான அன்பை வெளிப்படுத்தினார். இந்தப் படக்குழுவிற்கு என் வாழ்த்துகள். புதியவர்களின் முயற்சிகளை ஊக்குவிக்க நான் இங்கே வந்துள்ளேன். புதியவர்களுக்கு ஆதரவு அளிப்பது எனது இயல்பே,” என கூறினார்.
பின்னர் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது, “இந்தப் படத்தில் இசை அமைத்துள்ளார் இளையராஜா அவர்கள். அவருக்காக நான் ஒரு பாடல் எழுதியுள்ளேன். அந்தப் பாடல் இப்படிச் செல்கிறது: ‘இது ஏதோ ஒரு பிறவியில் ஏதோ ஒன்றின் அறிமுகம்.. நீ என்னுடையவன், இது என்னுடைய பரவசம்.. ராகம் உன்னுடையது.. பல்லவி என்னுடையது.. சரணம் வசனத்தைச் சந்திக்கும் போது, பயணங்கள் இமயமலைக்கு..’ இந்த வரிகள் எனது வாழ்க்கையோடும் தொடர்புடையதாகவே தோன்றுகிறது.
இது, இளையராஜா அவர்கள் மீதான என் அன்பை வெளிப்படுத்தும் பாடல் என்று கருதலாம். நான் எப்போதும் அவரது படங்களில் ஒரு பாடலை எழுதவேண்டும் என்று ஆசைப்படும் நிலையில் இருந்தேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவரது இசைக்காக பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்று அவருடன் அருகில் அமர்ந்திருப்பதை, எவரெஸ்ட் சிகரத்தில் அமர்ந்திருப்பது போல் உணர்கிறேன்,” என்று கூறினார்.