நகைச்சுவை, காதல் மற்றும் பேய் படங்கள் என இயக்கி ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் சுந்தர்.சி, 8ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட சரித்திரத் திரைப்படமான ‘சங்கமித்ரா’வை உருவாக்க இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்த படத்தில் ரவி மோகன், ஆர்யா, சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் போஸ்டர்கள் 2017ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டன. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை ரூ.250 கோடி செலவில் உருவாக்க திட்டமிட்டது. மேலும், ‘பாகுபலி’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கே.ஜி.எப்’ ஆகிய திரைப்படங்களை ஒத்த அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகளைப் பயன்படுத்தவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமலே தடைப்பட்டு விட்டது.
இந்நிலையில் இயக்குநர் சுந்தர்.சி ‘சங்கமித்ரா’ திரைப்படம் தொடர்பான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “சங்கமித்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்தப் படத்தை உருவாக்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தேவைப்படுவதால், எனது தற்போதைய படவாய்ப்புகளை முடித்த பிறகு இந்தப் படத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.