சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. அனிருத் இசையமைத்த இப்படம், உலகமெங்கும் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரும் சாதனையை பெற்றது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘ஜெயிலர் 2’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளராக மீண்டும் அனிருத் பணியாற்றுகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றது. அந்த படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து தற்போது கேரளாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கேரளாவின் அட்டப்பாடி மலைத்தொடரில் சுமார் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் இரண்டாம் பாகத்திலும் கேமியோ வேடங்களில் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ்குமார், தாம் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், “எனது பகுதியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும், முதல் பாகத்தில் நான் சிறிய பாத்திரத்தில் இருந்தாலும், அந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.