அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது வரை ரூ.160 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், “என் ஜோடி மஞ்ச குருவி”, “இளமை இதோ”, “ஒத்த ரூபாயும் தாரேன்” போன்ற மூன்று பாடல்களை உரிமம் பெறாமல், அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளனர். இதற்காக ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும், இந்த பாடல்களை ஒரு வாரத்திற்குள் திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். அதோடு மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு, “இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்கு சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்களிடம் முறையான அனுமதியை பெற்றோம். அந்த நிறுவனங்களிடம் தான் அந்த பாடல்களின் காப்புரிமை உள்ளது. அவர்கள் வழியாக தடையில்லா சான்றும் பெற்றோம். எனவே எல்லாமும் சட்டப்படி செய்யப்பட்டுள்ளதுடன், எந்த தவறும் செய்யப்படவில்லை” என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் விளக்கமளித்துள்ளது.