இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘இடி முழக்கம்’ ஆகிய திரைப்படங்கள் பல ஆண்டுகளாக வெளியீடின்றி காத்திருக்கின்றன. இதில் தற்போது ‘இடி முழக்கம்’ திரைப்படம் மீண்டும் வேலைகள் மேற்கொண்டு, வெளியீட்டுக்கு தயாராகும் நிலையில் உள்ளது.
ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ள இந்த படத்தில், ஜிவி பிரகாஷ் குமார் ஒரு இறைச்சிக் கடை உரிமையாளராகவும், காயத்ரி சங்கர் ஒரு செவிலியராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சவுந்தரராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கான வசனங்களை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்களை வெளியிட்டு ப்ரோமோஷன் பணிகளை தொடங்கியவர் நடிகர் விஜய் சேதுபதி ஆவார்.
தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சியை கலந்த ஒரு கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. அடுத்த மே மாதம் வெளியிடும் நோக்கில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.