தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கியவர் விஜயகாந்த். அவர் 1979ஆம் ஆண்டு வெளியான ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர், அவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

அந்த வகையில், 1991ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம், அவரின் 100வது திரைப்படமாகும். இந்த படத்தின் வாயிலாகவே அவருக்கு ‘கேப்டன்’ என்ற பிரபலமான பெயர் அமைந்தது. இப்படத்தில் மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியானதற்குப் பிறகு 34 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, இப்படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இது 4 கே தரத்தில் டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. முருகன் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனங்கள் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை மறுவெளியீடு செய்கிறார். தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.