தன் காந்தக் கண்களால் இளைஞர்களின் மனதில் தனக்கென இடம் பிடித்தவர். தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பல குடும்பங்களை ரசிகர்களாக மாற்றியவர். ‘ஜோ’ திரைப்படத்தில் “அத்தான்” என்ற ஒரே வார்த்தையால் அனைவரின் மனதையும் கைப்பற்றியவர் வைஷ்ணவி. அவர் பிறந்து வளர்ந்தது புதுக்கோட்டையில். பெற்றோர் விருப்பத்தின் காரணமாக மருத்துவம் படிக்க வேண்டும் என நினைத்ததால், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி முடித்தேன். ஆனால் எனக்கு சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆவலால் பி.ஏ. ஆங்கிலம் முடித்தேன்.

சென்னைக்கு யு.பி.எஸ்.சி படிக்க வந்த சமயத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து பதிவிட்ட வீடியோ பிரபலமானது. அதன்பின் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பல சீரியல்களில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறேன். நண்பர் ஒருவரின் பரிந்துரையின் மூலம் ‘ஜோ’ திரைப்படத்தில் கதாநாயகனுக்கு கொழுந்தியாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் இந்தக் கதாபாத்திரம் சாதாரணமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், கதை முன்னேறுவதில் முக்கிய பங்காற்றும் கதாபாத்திரமாக மாறி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் எனக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. பொதுமக்கள் எளிதாக என்னை அடையாளம் காணும் அளவிற்கு பிரபலமாகியுள்ளது. பின்னர், தெலுங்கில் ‘தல்லி மனசு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். ஒரு சக நடிகரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன். தற்போதைய சூழலில் பொறுப்புகள் அதிகரித்து இருப்பதால் வீட்டையும், வேலையையும் சமநிலையில் நடத்த என் கணவர் உறுதுணையாக இருப்பது பெரிய ஆதரவாக இருக்கிறது.
சீரியல் படப்பிடிப்புக்காக காலையில் வீட்டிலிருந்து கிளம்பினால், இரவாகும் போதே தான் வீடு திரும்ப முடிகிறது. “தொலைக்காட்சியில் நடிக்க அதிக ஆடைகள் கொடுப்பார்களா?” என்று பலரும் கேட்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆடைகளை நாம் தான் தேர்வு செய்து, சொந்தமாக வாங்குகிறோம். ஒரு சீரியலில் ஏற்ற கதாபாத்திரம் கிடைத்துப் பணியில் சேர்ந்தவுடன், தொடர்ந்து வருமானம் கிடைக்கும். இந்த நிலையான வருமானத்துக்காகவே பலரும் சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வருகிறார்கள்.
சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட், சினிமாவுடன் ஒப்பிடும்போது சற்று மாறுபட்டது. இங்குள்ள சக நடிகர், நடிகைகள் ஒரு குடும்பத்தைப் போலவே ஒன்றாக இயங்கி, தொடர் முழுவதும் இணைந்து பயணிக்கிறார்கள். எனவே, ஒவ்வொருவரிடமிருந்தும் புதியதும் பயனுள்ளதுமான விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. எனக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் சினிமாவில் அதிகமாக நடிக்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனால் தொடர்ச்சியாக சீரியல்களில் நடிப்பதால், சினிமா வாய்ப்புகளுக்காக நேரம் ஒதுக்குவது சிரமமாக இருக்கிறது.