கடந்த மாதம் வெளியான ‘மர்மர்’ என்ற ஹாரர் திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் தேவ்ராஜ். இந்தப் படத்திற்கு பிறகு, அவர் இரு புதிய திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்த இரண்டு படங்களும் ரொமான்டிக் கலந்த காமெடி கதைகளாக உருவாக உள்ளன என அவர் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, “தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சத்யராஜ் ஆகியோர் எனக்கு மிகுந்த ஈர்ப்பை அளித்த நடிகர்கள். இவர்களில் சத்யராஜ் எனக்கு மிகவும் பிடித்தவர். குறிப்பாக, அவர் நடித்த நெகட்டிவ் கலந்த ஹீரோ கதாபாத்திரங்களை நான் ரசித்து பார்ப்பேன். அதனால்தான் மலேசியத் தமிழில் உருவான ‘தனுஷ்’ என்ற படத்தில் வில்லனாக நடித்தேன்” என்றார்.

அதேபோல், “சினிமா துறையில் சத்யராஜ்தான் எனது ரோல் மாடல். அதனால்தான் எதிர்காலத்தில் நெகட்டிவ் கலந்த ஹீரோ கதைகளை அதிகம் தேர்வு செய்ய எண்ணுகிறேன். அதோடு கிராமப்புற கதைகளிலும் நடிக்க விருப்பமுள்ளது. சத்யராஜ் எனக்குப் பிடித்த நடிகரானாலும், அவருடைய நடிப்புப் பாணியை பின்பற்றாமல் எனக்கென ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்துவேன். எனது தனித்திறமையால் தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் பிடிப்பேன். ‘மர்மர்’ படத்தில் எனது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தை பார்த்த ரசிகர்கள் என்னை நேரடியாக தொடர்புகொண்டு பாராட்டியிருப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. அதனால், அடுத்த படங்களில் மேலும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் நிலையான இடம் பிடிக்க முயற்சி செய்கிறேன். ஏற்கனவே சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளேன். ஆனால் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்” எனத் தெரிவித்தார் தேவ்ராஜ்.