கடந்த ஆண்டு மலையாள திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் உருவானதும், பெரும்பாலும் புதிய முகங்களை கொண்டு வெளிவந்த ‘பிரேமலு’ திரைப்படம் எதிர்பாராத அளவிற்கு பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த மமீதா பைஜூ, விஜய் மற்றும் சூர்யா நடித்த படங்களில் இணைவதற்குள் பிரபலமானவர் ஆகிவிட்டார். இதே போல, கதாநாயகனாக அறிமுகமான நஸ்லேன் மற்றும் அவருடைய நண்பராக நடித்த சங்கீத் பிரதாப் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகின்றன.

அந்தவகையில் நஸ்லேன் கதாநாயகனாக நடித்துள்ள அவரது இரண்டாவது படம் ‘ஆலப்புழா ஜிம்கானா’ எனும் பெயரில் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மம்முட்டி நடித்த ‘உண்ட’ மற்றும் டொவினோ தாமஸ் நடித்த ‘தள்ளுமால’ ஆகிய ஹிட்டான படங்களை இயக்கிய காலித் ரஹ்மான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் கதை கல்லூரியில் சேர விரும்பும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. குறிப்பாக, கதாநாயகன் நஸ்லேன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு பிரபலமான கல்லூரியில் சேர முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அங்கே இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதன் காரணமாக, ஸ்போர்ட்ஸ் கோட்டாவைப் பயன்படுத்தி சேருவதற்காக பாக்ஸிங் கற்றுக்கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள், அவர்களுக்கு இடம் கிடைக்கிறதா என்ற கேள்வியின் சுழலில் இந்த கதை நகைச்சுவை கலந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.