சமூக சேவகி சிந்துதாய் சப்கல், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ரக்மாபாய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் கவுர் ஹரி தாஸ்தான் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படங்களை இயக்கியவர் ஆனந்த் மகாதேவன். இதில் ‘சிந்துதாய் சப்கல்’ திரைப்படம் நான்கு தேசிய விருதுகளை வென்றது.

பாலிவுட் குணச்சித்திர நடிகராக விளங்கிய இவர், தமிழில் ‘ரிதம்’, ‘2.ஓ’, ‘கேம் சேன்ஜர்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்கியுள்ள படம் ‘புலே’. இது, இந்தியாவின் முதல் ‘மகாத்மா’ என்று அழைக்கப்படும் ஜோதிராவ் புலே மற்றும் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் புலே தம்பதிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. மகாத்மா காந்திக்கு முன்னரே, ஆங்கிலேயர்களுக்கு எதிராக அகிம்சைப் போராட்டம் நடத்தியவரும், பெண் விடுதலை குறித்து உரைத்தவரும், அரசியல் சுதந்திரத்தைவிட சமூக சுதந்திரமே முக்கியம் என வலியுறுத்தியவரும் தான் ஜோதிராவ் புலே.
இந்த படம் ஏப்ரல் 11-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதைப் பற்றி ஆனந்த் மகாதேவன் கூறுகையில், புலே தம்பதிகளை மையமாகக் கொண்டு பாலிவுட்டில் இதுவரை எந்த படமும் வரவில்லை. ‘காந்தி’ படத்தைப் போல, புலே தம்பதியின் சிறுவயதிலிருந்து இறுதி கட்டம் வரை அவர்களின் வாழ்க்கையை முழுமையாக படம் பிடித்திருக்கிறோம். செட் எதுவும் அமைக்காமல், அவர்கள் வாழ்ந்த புனே, கோலாப்பூர் உள்ளிட்ட மகாராஷ்டிர மாநில பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது.
புலே தம்பதியரின் புகைப்படங்கள் கிடைக்காததால், ஓவியங்களை மட்டுமே பெற்றோம். அந்த ஓவியங்களைப் பார்த்ததும், பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நினைவுக்கு வந்தனர். ‘ஸ்கேம் 1992’ தொடரில் ஹர்ஷத் மேத்தாவாக பிரபலமான பிரதிக் காந்திக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை இந்த படத்தில் நடிக்க அழைத்ததும், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா இருவரும் புலே தம்பதிகளுக்குச் சிறப்பான நியாயம் செய்துள்ளனர் எனவும் கூறினார்.