ஏ.எல். விஜய் இயக்கிய ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாயிஷா. இதில் ஜெயம் ரவிக்குத் தோழியாக நடித்திருந்தார். அதன் பின்னர், ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’, ‘காப்பான்’, ‘டெடி’ ஆகிய படங்களில் நடித்தார். தமிழுடன், தெலுங்கு, இந்தி, கன்னட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.’கஜினிகாந்த்’ படத்தின் போது நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. அந்த காதல் திருமணத்தில் முடிவடைந்தது. தற்போது ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

குழந்தை பிறந்த பின்பு மீண்டும் சினிமாவிற்கு திரும்ப விரும்பும் சாயிஷா, புதிய கதைகளை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டு இருக்கிறார். ‘கஜினிகாந்த்’, ‘டெடி’ படங்களைத் தொடர்ந்து, ஆர்யா-சாயிஷா ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள்.சமூக வலைதளங்களில், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார் சாயிஷா. சமீபமாக, நடனமாடும் வீடியோக்களை தொடர்ச்சியாக பதிவிட்டுவருகிறார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், 2013-ம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான ‘ரேஸ் 2’-இல் இடம்பெற்ற ‘லாட் லக் கையி’ பாடலுக்கு நடனமாடுகிறார். அந்த வீடியோவை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.