நடிகர் சூர்யா தனது 44வது படமான ‘ரெட்ரோ’வில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதில், நடிகை ஸ்ரேயா ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமாடியுள்ளார். ‘ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘கண்ணாடி பூவே’ சமீபத்தில் வெளியான போது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, படத்தின் இரண்டாவது பாடலான ‘கனிமா’ பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது, இது மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலானது.
‘ரெட்ரோ’ படக்குழு, படத்தின் பின்னணி செயல்பாடுகளை காமிக் வடிவில் வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த வாரம் வெளியிடப்பட்ட 8வது அத்தியாயத்தில், நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஜோஜூ ஜார்ஜின் திறமையான நடிப்பை விவரித்துள்ளது.படப்பிடிப்பின்போது, ஜெயராம் எப்போதும் சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். பல்வேறு நடிகர்களின் குரலில் பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ், படப்பிடிப்பின்போது முழுமையாக தமிழ் பேசிச் சக நடிகர்களையும் படக்குழுவினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் என அந்தக் காமிக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.