பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக, தமிழகத்தில் 200 நாட்களுக்கு அதிகமான காலத்திற்கு திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனை படைத்தது. இதில், சாய் பல்லவி நடித்த ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் படத்திலேயே அவருக்கு சிறந்த நடிகை என்ற பெயர் கிடைத்ததை தொடர்ந்து, தமிழ் திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன.
நடிகை சாய் பல்லவி நடித்த சமீபத்திய திரைப்படங்களான ‘அமரன்’ மற்றும் ‘தண்டேல்’ இரண்டும் வெற்றிபெற்றதால், அவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். தற்போது, இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பல முன்னணி இயக்குநர்களும் அவருக்கு கதைகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஊட்டியில் அமைந்துள்ள கோத்தகிரியில் நடந்த தனது உறவினரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சாய் பல்லவி, அங்கு உறவினர்களுடன் இணைந்து படுகர் நடனம் ஆடி மகிழ்ந்தார். நீலநிற சேலையில் அவர் gracefully நடனமாடிய அந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.