பாலிவுட்டில் முன்னணி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவரது நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான வார் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதில் டைகர் ஷ்ராப் மற்றும் வாணி கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் ஹிருத்திக் ரோஷன் மேஜர் கபீர் தலிவாலா எனும் பாத்திரத்தில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து, யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸின் புதிய படம் வார் 2 தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் மீண்டும் ஹிருத்திக் ரோஷன் மேஜர் கபீர் தலிவாலாவாக நடிக்க உள்ளார். இப்படத்தை பிரம்மாஸ்திரா படத்தை இயக்கிய அயன் முகர்ஜி இயக்குகிறார். இதில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த சூழலில், இப்படத்திற்கான நடனக் காட்சிகளை மும்பையில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஹிருத்திக் ரோஷன் கீழே விழுந்து காயமடைந்தார். இதில் அவரது காலில் கடுமையான சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாதம் ஓய்வு வேண்டுமென அறிவுறுத்தியதால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.