ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்தவர் ‘பூவே உனக்காக’ புகழ் நடிகை சங்கீதா. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்தார். ‘பூவே உனக்காக’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான சரவணனை அவர் திருமணம் செய்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நகர வரிதி நடுவில் நிஞ்சன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு திரும்பினார்.

அதன்பிறகு, மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சாவெர்’ படத்தில் நடித்தார். அதன் தொடர்ச்சியாக, மேலும் சில மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் அவர் கடைசியாக 2000 ஆம் ஆண்டு வெளியான ‘கண் திறந்து பாரம்மா’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.


தற்போது, 25 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்குத் திரும்பியுள்ளார் சங்கீதா. பரத் நடித்துவரும் ‘காளிதாஸ் 2’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.