வரும் 08.03.2025 அன்று, பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில், புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்ற உள்ளார். மேற்கத்திய இசை வடிவமான Symphony இசையை வெறும் 34 நாட்களில் உருவாக்கி, உலகளவில் தமிழர்களின் பெருமையை வெளிப்படுத்தவிருக்கும் இவருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், தொல். திருமாவளவன், சிவகார்த்திகேயன், பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இன்று காலை, இளையராஜா, லண்டனுக்குச் செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகளுடன் வழியனுப்பப்பட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசுகையில்,”சிம்பொனி இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். தமிழ்நாட்டிலிருந்து லண்டன் சென்று, அப்பல்லோ அரங்கில் இசை அரங்கேற்றுவது, எனக்கு பெருமையாக உள்ளது.
நான் தனியாக இதைச் செய்யவில்லை. இது எனது பெருமை மட்டும் அல்ல, தமிழர்களின் பெருமை. இந்தியாவின் பெருமை. அனைவரும் இணைந்துதான் நான் வளர்ந்தேன். ‘Incredible India’ போல, நான் ‘Incredible Ilayaraja’. என் வரலாற்றை மீறி யாரும் வரமுடியாது, வரப்போவதும் இல்லை. நான் என் வேலையை சிறப்பாகச் செய்வதில் கவனம் செலுத்துவேன். நீங்கள் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள். இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகள்!”என்று பூரிப்புடன் பேசி முடித்த பிறகு, விமானத்தில் ஏறி, லண்டனுக்குப் புறப்பட்டார்.