ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதையடுத்து, இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா, இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்து நடிக்கிறார். இந்நிலையில் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார்.
இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் பூஜை விழா இன்று (மார்ச் 6) சென்னையின் பிரசாத் ஸ்டுடியோவில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்காக பிரத்யேக செட் அமைக்கப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் தாணு, நடிகைகள் குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி, யோகி பாபு, கருடா ராம், கே. எஸ். ரவிக்குமார், ரெஜினா, அபிநயா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் இதில் பங்கேற்றனர். பின்னர், படத்தின் பூஜை நடத்தப்பட்டது, தொடர்ந்து முதல் ஷாட்டும் படமாக்கப்பட்டது.