தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால், மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில், நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘லூசிபர்’. இந்த திரைப்படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
‘லூசிபர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. டோவினோ தாமஸ், இப்படத்தில் ‘ஜதின் ராம்தாஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் முக்கியமான 36 கதாபாத்திரங்களை 18 நாட்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மஞ்சு வாரியர் இப்படத்தில் ‘பிரியதர்ஷினி ராமதாஸ்’, டோவினோ தாமஸ் ‘ஜதின் ராம்தாஸ்’, பிருத்விராஜ் ‘சையத் மசூத்’ என்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல, படத்தின் மிக முக்கியமான மோகன்லாலின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மோகன்லால், ‘குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படம் வரும் மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.