ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் நிறுவனத்தின்கீழ், மை இண்டியா மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்”. 1980களில் “நெஞ்சமெல்லாம் நீயே, உதயகீதம், கீதாஞ்சலி, உயிரே உனக்காக உனக்காகவே வாழ்கிறேன், பாடு நிலாவே” போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் கே.ரங்கராஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் மார்ச் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் ஸ்ரீகாந்த், நான் திரையுலகில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில் பல முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளேன். இப்போது, இயக்குநர் ரங்கராஜ் அவர்களுடன் பணியாற்றியுள்ளேன், இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
சினிமா தவிர எனக்கு வேறு எந்த விஷயமும் தெரியாது. கடைசி வரை சினிமாவில் தொடர்ந்து இருப்பதற்கே நான் விருப்பம் கொள்கிறேன். படங்களில் தம், தண்ணி, ஆடை போன்ற விஷயங்களை பேச வேண்டுமா, வேண்டாமா என்பது அவரவர் விருப்பம். மக்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்.
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் “சதுரங்கம்”. ஆனால், அந்த படத்தை முறையாக வெளியிடாமல் அழித்துவிட்டார்கள். ஆனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது. இதுதான் சினிமாவின் தன்மை.ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் சினிமாவை அழிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லோரும் இணைந்து, முதலில் சினிமாவை பாதுகாக்க வேண்டும். சினிமாதான் என் குடும்பம். இன்னும் நான் சினிமாவில் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.