தெலுங்கு திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வரும் படம் குபேரா. இப்போது, இந்தப் படத்தின் தலைப்பைச் சுற்றி ஒரு புதிய பிரச்சினை எழுந்துள்ளது.
தெலுங்குத் தயாரிப்பாளர் கரிமகொன்ட நரேந்தர், தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் 2023 நவம்பரில் குபேரா என்ற தலைப்பை பதிவு செய்துள்ளதாகவும், தற்போது அவரது படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், குபேரா என்ற தலைப்பை சேகர் கம்முலா மாற்ற வேண்டும், அல்லது தன்னுடைய படத்திற்கு ஏற்படும் இழப்புக்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதே நேரத்தில், சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டத்தில் தலைப்புச் சார்ந்த பிரச்சினை எழுந்துள்ளதால், படக்குழு எந்த முடிவுக்கு வரப்போகிறது என்பது ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.