2013 ஆம் ஆண்டு, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த த்ரிஷ்யம் திரைப்படம் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தத் திரைப்படம் தமிழில், தெலுங்கில், இந்தியில், மேலும் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில், இப்படம் பாபநாசம் என்ற பெயரில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அனைத்து மொழிகளிலும் இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக, 2021 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தையும் ஜீது ஜோசப் இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் போலவே, இரண்டாவது பாகமும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, த்ரிஷ்யம் 3 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை மோகன்லால் வெளியிட்டுள்ளார். அவர் பகிர்ந்த புகைப்படத்தில், அவருடன் இயக்குநர் ஜீது ஜோசப் காணப்படுகிறார். அந்த புகைப்படத்திற்குப் “கடந்த காலம் எப்போதும் அமைதியாக இருக்காது” என்ற தலைப்பை அவர் வழங்கியுள்ளார். இதனால், இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.