‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் முதல் படத்திலேயே தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நடிகை சாய் பல்லவி, பின்னர் மலையாளத் திரையுலகை விட்டு தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். குறிப்பாக, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வரிசையாக வெற்றி பெறுவதோடு, ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் நாகசைதன்யா உடன் இணைந்து நடித்த ‘தண்டேல்’ திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘அமரன்’ படத்தில், சிவகார்த்திகேயனின் மனைவியாக, ஒரு ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது நடிப்பை ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களும் பாராட்டி, “இந்த படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது” எனக் கூறினர்.


இந்நிலையில், தேசிய விருது கிடைக்க வேண்டும் என அவர் விரும்பும் முக்கிய காரணம் வெறும் நடிப்பிற்காக மட்டும் அல்ல. சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுபற்றி பேசுகையில், “என்னுடைய பாட்டி, என் திருமணத்திற்காக அணிய வேண்டியதாக நினைத்து, எனக்கு ஒரு சிறப்பு புடவை வாங்கி வைத்திருக்கிறார். ஆனால், திருமணம் எப்போது என்பது எனக்குத் தெரியாது. அதே நேரத்தில், தேசிய விருது போன்ற உயரிய விருதினை பெறும் ஒரு முக்கிய விழாவில் அந்த புடவையை அணிந்து கலந்துகொள்வது சிறப்பாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அதனால், எனக்கு ஒரு தேசிய விருது கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார் சாய் பல்லவி.