கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சந்தானம், ரசிகர்களிடையே தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். 2016ல் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’, 2023-ல் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உருவாகி வருகிறது.இந்தப் படத்தை ஆர்யா தயாரித்து, பிரேம் ஆனந்த் இயக்குகிறார்.

சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவாக நடைபெற்று, தற்போது முழுமையாக முடிந்துவிட்டதாக தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.
மே மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கான டப்பிங் பணிகளை சந்தானம் இன்று தொடங்கியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.2023-ல் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ வெற்றியைத் தொடர்ந்து, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ கூடவே சிறப்பாக வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.