நடிகராகவும், இயக்குநராகவும் தன்னை நிறுவிக் கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இரண்டு வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமான அவர், தற்போது மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவர் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
இன்னும் சில நாட்களிலேயே படம் திரையரங்குகளில் வெளியாவதால், இன்று படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதற்காக, படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
‘டிராகன்’ திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாவதோடு, அதே நாளில் நடிகர் தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படமும் வெளியாவதால், இது போட்டியாக மாறும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பிரதீப் ரங்கநாதன், “அஜித் படத்தின் ரிலீசால் ‘டிராகன்’ படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தோம். இதே காரணத்திற்காக தனுஷின் படமும் தள்ளி போயிருக்கலாம் என்று நினைக்கிறேன். எனவே, இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகினாலும், அதை நான் போட்டியாக பார்க்கவில்லை” என கூறினார்.மேலும், “இரண்டு படங்களும் காதல் சார்ந்த கதையம்சத்தைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள் எதனை அதிகமாக ஆதரிப்பார்கள் என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.