நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இவரது படங்கள் பெரும்பாலும் உணர்வுபூர்வமானதாக இருக்கும். குறிப்பாக, மோகன்லாலுடன் இணைந்து உருவாக்கிய ‛நாடோடி காட்டு, பட்டினப்பிரவேசம், ரசதந்திரம், சிநேக வீடு’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இவர்களது கூட்டணியில் கடைசியாக வெளியான படம் ‛என்னும் எப்பொழும்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157403-1024x683.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157402-1024x683.jpg)
தற்போது, சுமார் 10 ஆண்டுகள் கழித்து, மோகன்லாலும் சத்யன் அந்திக்காடுவும் மீண்டும் ‘ஹிருதயபூர்வம்’ என்ற புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் ‘பூவே உனக்காக’ புகழ் சங்கீதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதையை சத்யன் அந்திக்காட்டின் மகன்களில் ஒருவரும் இயக்குனருமான அகில் சத்யன் எழுதியுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157405-1024x683.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157404-1024x683.jpg)
இன்று (பிப்ரவரி 10) இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ஏற்கனவே, ஓணம் பண்டிகை (ஆகஸ்ட் 28) நாளில் படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.