வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “Bad Girl” திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கான இசையமைப்பை அமித் த்ரிவேதி மேற்கொண்டுள்ளார். சமீபத்தில், படக்குழு இப்படத்தின் டீசரை வெளியிட்டது. இத்திரைப்படம் ஒரு இளம்பெண் தனது வளர்ந்துவரும் பருவத்தில் சந்திக்கும் ஆசைகள், கனவுகள் மற்றும் இச்சைகள் குறித்து பேசுகிறது. அவள் இந்த உலகத்தை எவ்வாறு உணர்கிறாள், பார்ப்பாள், அனுபவிக்கிறாள் என்பதையும் இப்படம் பிரதிபலிக்கிறது. இந்த திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், தற்போது இப்படம் ரோட்டர்டாமின் மதிப்புமிக்க விருதான NETPAC விருதை வென்றுள்ளது. இந்த விருதை “Network for the Promotion of Asian Cinema” என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான இந்த விருது புதுமுக இயக்குனர்களுக்கு வழங்கப்படும் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இதனை தேர்வு செய்வதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழ் திரைப்படம் இந்த விருதைப் பெற்றுள்ளமை, தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் அதன் அங்கீகாரத்திற்கும் முக்கிய அடையாளமாகும்.