தமிழ் திரைப்படங்களில் “அவள் பெயர் தமிழரசி,” “வீரம்,” “நீர்ப்பறவை” போன்ற படங்களில் நடித்துள்ள மனோ சித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கூறியுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155798.jpg)
அவர் கூறுகையில், “‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்றது. அந்த நேரத்தில், எப்படியாவது சிறப்பாக நடித்து பெரிய நடிகையாக வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. ஆனால், படப்பிடிப்பின் போது எனக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்தன.படத்தின் கதையை முதலில் என்னிடம் கூறியபோது, ஹீரோயின் கதாபாத்திரம் பாதியிலேயே இறந்துவிடும், அதன் பிறகு அஜித் அவர்களுக்கு ஜோடியாக நீங்கள் இருப்பீர்கள் என்று சொல்லியிருந்தனர். ஆனால், படப்பிடிப்புக்கு சென்றபின் மட்டுமே கதை அப்படி இல்லை என்று எனக்கு தெரிந்தது. இதனால், நான் நடிக்க மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்ல முடிவு செய்தேன்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155800-1024x972.png)
பின்னர், படக்குழுவினர் எனை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், இரண்டு நாட்களில் நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். சில நாட்கள் கழித்து, “இரண்டு நாட்கள் மட்டும் நடித்துவிட்டு செல்லுங்கள்” என்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டதால், அஜித் சாருக்காகவே அந்த இரண்டு நாட்கள் நடித்தேன். எனினும், ‘வீரம்’ படம் எனது தமிழ் சினிமா பயணத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது,” என்று மனோ சித்ரா கூறியுள்ளார்.