நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஜார்கண்டில் உள்ள ஒய்.எஸ்.எஸ். ராஞ்சி ஆசிரமத்திற்கு சென்றிருந்தார். அங்கு கிடைத்த அனுபவத்தைப் பற்றி, தனது வீடியோ பதிவில் பகிர்ந்துள்ளார்.
அதில், “ஒய்.எஸ்.எஸ். ராஞ்சி ஆசிரமத்துக்கு நான் மூன்றாவது முறையாக வந்துள்ளேன். பரமஹம்ச யோகானந்தாஜியின் அறையில் அமர்ந்து யோகா செய்யும் பாக்கியம் கிடைத்தது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆசிரமத்துக்கு வந்துள்ளேன். இனி ஆண்டுதோறும் இங்கு வந்து, ஒரு வாரம் தங்குவதாக முடிவு செய்துள்ளேன்.
பலரும் என்னைப் பார்த்ததும், ‘நீங்கள் மிகவும் வைப்ரேஷன் நிறைந்ததாக இருக்கிறீர்கள், உங்கள் உடல்முழுவதும் நேர்மறை ஆற்றல் காணப்படுகிறது’ என்று கூறுகின்றனர். அதன் காரணம், நான் கிரியா யோகா பயிற்சி செய்து வருவதே, 2002ம் ஆண்டு முதல் கிரியா யோகாவில் ஈடுபட்டு வருகிறேன். ஆரம்பத்தில் எந்த மாற்றமும் உணரப்படவில்லை. ஆனால் பயிற்சியை தொடர்ந்தேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தான் உண்மையான மாற்றத்தை உணர முடிந்தது. என் மனதிற்குள் அமைதி நிலவியது. கிரியா யோகாவின் ஆற்றலை உணர்ந்தவர்களுக்கு அது எவ்வளவு வலிமையானது என்பதே புரியும். இது ஒரு பரம ரகசியம். அனைவரும் இதைப் பயிலலாம், பயில வேண்டும்!” என அவர் கூறியுள்ளார்.