‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தில் கவுண்டமணியுடன், யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இவர், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கவுண்டமணி – செந்திலின் நகைச்சுவை பகுதிகளை எழுதியதோடு, பல படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அரசியல் நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை, சினி கிராப்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவிராஜா தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இப்படத்திற்காக இசையமைத்துள்ளார்.
‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ், பி.வாசு, சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திரைப்படத்தைப் பற்றி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில், கவுண்டமணி பேசும் போது, “என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஏற்கனவே, என் முன்னதாகப் பேசிய அனைவரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ பற்றிப் பேசிவிட்டார்கள். இது குடும்பத்துடன் வந்து காணவேண்டிய படம். அனைவரும் இதைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையாவை’ வெற்றிப் பெறும் ‘ஓட்டு முத்தையாவாக’ மாற்றுங்கள். விழாவிற்கு வந்த ரசிகர்கள் மட்டுமல்ல, வராமல் இருந்த ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி,” என கூறினார். மேலும், இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.