விஷ்ணு விஷால், கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் ரசிகர்களிடையே பெரிய அளவிலான வரவேற்பைப் பெறவில்லை.
அதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், ஆர்யன் என்ற படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சில மாதங்களுக்கு முன் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆர்யன் ஒரு போலீஸ் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதில், படப்பிடிப்பு காட்சிகள் மற்றும் விஷ்ணு விஷால் கலந்து கொண்ட அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளது.