தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஷாம். அவர் 2001ஆம் ஆண்டு வெளியான 12B திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் உள்ளம் கேட்குமே, லேசா லேசா போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். தற்போது, கதையின் தேவைக்கேற்ப குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி மற்றும் விஜய் நடித்த வாரிசு போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று, மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
தற்போது, அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தில் ஷாம் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அஸ்திரம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகிகளாக நீரா மற்றும் வெண்பா நடித்துள்ளனர். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை கல்யாண் வெங்கட்ராமன் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.

அஸ்திரம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில், அஸ்திரம் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை பிரபல நடிகர்கள் விஷால், சரத்குமார், ஆர்யா, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் யோகி பாபு ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.